அடக்கம் செய்ய பணம் இல்லாமல் இறந்து பிறந்த குழந்தையின் உடலை கூவத்தில் வீசிய தந்தை
சென்னை எழும்பூரில் அடக்கம் செய்ய பணம் இல்லாமல் இறந்த நிலையில் பிறந்த குழந்தையின் உடலை தந்தையே கூவம் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 29). இவருடைய மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. சந்தோஷ் குமார் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். சுகன்யா 2-வதாக கர்ப்பமான நிலையில் பவர் ஹவுசில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு முன்னதாக சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, கடந்த 10-ந்தேதி எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் சுகன்யாவுக்கு பிரசவ வலி வந்ததையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்த நிலையில், பிரசவத்தின்போது இறந்த நிலையிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கூவத்தில் வீசினார்
இதையடுத்து, டாக்டர்கள் சந்தோஷ் குமார் மற்றும் அவரது பெற்றோரிடம் நேற்று காலை குழந்தையின் உடலை ஒப்படைத்தனர். அப்போது, உறவினர்கள் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். சந்தோஷ் குமாரிடம் குழந்தையின் உடலை பார்த்துக்கொள்ளுமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சந்தோஷ் குமார் தன்னிடம் இருந்த கைப்பையில் குழந்தையின் உடலை வைத்துக்கொண்டு தன்னுடன் எடுத்துசென்றார். பின்னர், தன்னிடம் இருந்த பணத்தில் மது அருந்திவிட்டு எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பாலத்தின் மேலே இருந்து குழந்தையின் உடலை கூவம் ஆற்றில் வீசினார்.
இதைக்கண்டு அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, மதுபோதையில் இருந்த சந்தோஷ் குமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தனது மனைவிக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் கூவம் ஆற்றில் வீசியதாக தெரிவித்தார்.
வழக்கு பதிவு
இதையடுத்து, போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கூவம் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2 மணி நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் குழந்தையின் உடலை மீட்டனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதி ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் சந்தோஷ்குமார், ஆயிரம் விளக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.