உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிச்சை பலனின்றி சாவு


உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.

தென்காசி

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் பீட் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடந்த 19-ந்தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ஒரு இடத்தில் யானைகள் கூட்டமாக நின்று பிளிறிக் கொண்டிருந்தன. அதன் அருகில் வயதான பெண் யானை படுத்து கிடந்தது.

இதையடுத்து வனத்துறையினர் சத்தம் எழுப்பி, யானைகள் கூட்டத்தை விரட்டினர். தொடர்ந்து படுத்து கிடந்த யானையை வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். இதில் சுமார் 40 வயதான அந்த பெண் யானை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து உடல் நலிவுற்ற யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அதற்கு சோர்வை போக்கும் வகையிலான மருந்துகளையும், உணவுப்பொருட்களையும் வழங்கினர். தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினரும், கால்நடை மருத்துவ குழுவினரும் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதையடுத்து அந்த யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து வனப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி யானையை புதைத்தனர். வயது முதிர்வாலும், உடல் நலக்குறைவாலும் பெண் யானை இறந்திருக்கலாம் என்றும், எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் குறித்த முழு விவரமும் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story