மரம் முறிந்து விழுந்து தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் சாவு
மரம் முறிந்து விழுந்து தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் சாவு
கும்பகோணத்தில், ஸ்கூட்டரில் சென்றபோது மரம் முறிந்து விழுந்து தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சரவணப்பொய் கை தெரு வை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகள் திவ்யா என்கிற வள்ளி(வயது 37). கணவரை பிரிந்த இவர் தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
சுவாமிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே ஆஸ்பத்திரியில் பாபநாசம் வட்டம் கீழமாஞ்சேரி பகுதியை சேர்ந்த பாஸ்கர் மனைவி சோபனா(32) என்பவரும் வேலை பார்த்துள்ளார். இதனால் திவ்யாவும், சோபனாவும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
மரம் முறிந்து விழுந்தது
நேற்று மதியம் இருவரும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக சுவாமிமலை பகுதியில் இருந்து கும்பகோணத்திற்கு ஸ்கூட்டரில் வந்துள்ளனர். ஸ்கூட்டரை திவ்யா ஓட்டினார். சோபனா பின்னால் அமர்ந்து இருந்தார்.
இவர்கள் வளையப்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதில் சாலையோரத்தில் இருந்த ஒரு மரம் முறிந்து திவ்யா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது விழுந்தது.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்த திவ்யா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சோபனாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.