உள்ளூர் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


உள்ளூர் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரை  திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்;  ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

உள்ளூர் தொலைக்காட்சி பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு

உள்ளூர் தொலைக்காட்சி பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

ஈரோட்டை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, தனியார் விழாக்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார். அப்போது ஈரோடு முத்தம்பாளையம் பகுதி 1 மல்லிகை வீதியை சேர்ந்த செல்வம் என்பவருடைய மகன் ராகுல் (வயது 29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

ராகுல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக அந்த பெண்ணை பணியாற்ற அழைத்து வந்தார். மேலும், பெண் தொகுப்பாளரிடம் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதுபோன்று பழகிய ராகுல், அவரை காதலிப்பதாக கூறினார். அந்த பெண்ணும் அதை நம்பி காதலிக்க தொடங்கினார். அவர்கள் 3 மாதம் காதலில் இருக்கும்போதே, எதிர்கால திருமண வாழ்க்கை குறித்து பேசிய ராகுல், நமது எதிர்காலம் நன்றாக இருக்க நாம் 2 பேரும் தனிமையில் மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஆசை வார்த்தைகள் கூறினார். ஆனால், நெருக்கமாக இருக்க பெண் தொகுப்பாளர் அனுமதிக்கவில்லை.

பாலியல் பலாத்காரம்

இந்தநிலையில் கடந்த 20-5-2018 அன்று கோவையில் ஒரு நிகழ்ச்சியை ராகுல் ஒருங்கிணைத்து நடத்துவதாக இருந்தது. இதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக அந்த பெண் வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். காதலனின் வேண்டுகோளை ஏற்று கோவைக்கு சென்றார். அங்கு 2 பேரும் தங்குவதற்காக ஒரு ஓட்டலில் ராகுல் ஒரே ஒரு அறையை பதிவு செய்து வைத்திருந்தார். அங்கு தனியாக 2 பேரும் இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ராகுல், பெண் தொகுப்பாளரின் விருப்பத்துக்கு மாறாக அவரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டார். அப்போது உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ராகுல் திட்டமிட்டு பலமுறை கோவைக்கு அழைத்துச்சென்று ஓட்டல்களில் அறை எடுத்து அந்த பெண் தொகுப்பாளருக்கு பொய்யான வாக்குறுதியை அளித்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே திருமணம் செய்வதாக உறுதி அளித்து, அந்த பெண்ணிடம் இருந்து ரூ.8 லட்சம் , 1¾ பவுன் தங்க நகையும் ராகுல் வாங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் பெண் தொகுப்பாளர் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது, ராகுல் திருமணத்துக்கு மறுத்தார். அத்துடன் அவர் வாங்கிய பணம் மற்றும் நகையையும் கொடுக்க மறுத்து விட்டார். தொடர்ந்து அந்த பெண் கேட்டபோது, ராகுல் மோசடி செய்யும் நோக்கத்தில் தன்னுடன் பழகியதும், அதற்காக தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டதும் தெரியவந்தது.

10 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து அந்த உள்ளூர் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 23-7-2021 அன்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ராகுலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் நீதிபதி ஆர்.மாலதி கூறி இருந்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.


Related Tags :
Next Story