சேவை குறைபாடு:தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.3½ லட்சம் அபராதம்


சேவை குறைபாடு:தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.3½ லட்சம் அபராதம்
x

கர்ப்பிணிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.3.60 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

கர்ப்பிணிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.3.60 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கர்ப்பிணி

குமரி மாவட்டம் துண்டத்துவிளையை சேர்ந்த 35 வயது கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன்பிறகு அந்த பெண்ணுக்கு ரத்தப் போக்கு மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆவணங்களை வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பெண் வக்கீல் மூலமாக ஆஸ்பத்திரிக்கு நோட்டீசு அனுப்பினார்.

அபராதம்

அதன்பிறகும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர் ஆஸ்பத்திரியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரூ.2 லட்சத்து 75 ஆயிரமும், முறையான ரசீது மற்றும் சிகிச்சை செய்த ஆவணங்களை தர மறுத்த காரணத்திற்காக ரூ.75 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர். மேலும் ரூ.75 ஆயிரத்தை வழக்கு தொடர்ந்த நாள் முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதோடு வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரத்தையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மொத்ததில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.


Next Story