வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
அரசு ரப்பர் கழகத்தின் கணக்கை முடக்கியதால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது.
நாகர்கோவில்:
அரசு ரப்பர் கழகத்தின் கணக்கை முடக்கியதால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகம், டிஸ்டிலரி ரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பல்வகை வைப்புத் தொகை திட்டத்தின் கீழ் கணக்கு வைத்துள்ளது. இந்த கணக்கை வங்கியானது ரப்பர் கழகத்திற்கு தகவல் தெரிவிக்காமலேயே முடக்கி வைத்தது. இதுபற்றி அறிந்த அரசு ரப்பர் கழகம் இதுகுறித்து வங்கியிடம் புகார் தெரிவித்தது.
அதற்கு பதிலளித்த வங்கி நிர்வாகம், கணினியில் ஏற்பட்ட குறைபாட்டினால் இவ்வாறு நடந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் இந்த குறிப்பிட்ட காலத்திற்கு உள்ள வைப்பு தொகைக்கான வட்டி தொகையை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அரசு ரப்பர் கழக நிர்வாகிகள் வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அபராதம்
ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் அரசு ரப்பர் கழக நிர்வாகிகள் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி வங்கி கணக்கு முடக்கப்பட்ட காலத்திற்கான வட்டித் தொகை ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 65 மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 65-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் உத்தரவிட்டனர்.