பெண் போலீஸ் ஏட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்
ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய பெண் போலீஸ் ஏட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய பெண் போலீஸ் ஏட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
போக்குவரத்து விதிகளை மீறல்
குமரி மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் படி பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பேரணி நிகழ்ச்சிகளையும் போலீசார் நடத்தி வருகின்றனர்.
அப்படி போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை அறிவுறுத்தும் வகையில் பெண் போலீஸ் ஏட்டு ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
பெண் போலீஸ் ஏட்டு
குளச்சல் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் ஒருவர் போலீஸ் நிலையத்தில் இருந்து தனது ஸ்கூட்டரில் வெளியே புறப்பட்டார். அங்கிருந்து புறப்பட்டு சாலையில் சென்றபோது, அவர் ஹெல்மெட் அணியவில்லை. மேலும் செல்போனில் பேசியபடி அவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்றார்.
இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கவனத்திற்கு சென்றது. உடனே இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில் பெண் போலீஸ் ஏட்டு போக்குவரத்து விதிகளை மீறியது தொியவந்தது.
ரூ.2 ஆயிரம் அபராதம்
அதைத்தொடர்ந்து அந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து குளச்சல் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் போக்குவரத்து விதிகளை மீறியதாக பெண் போலீஸ் ஏட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.