சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்காத சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நாகர்கோவில்,
விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்காத சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
சுற்றுலா நிறுவனம்
குமரி மாவட்டம் வடகரையை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் சென்னை ஆவடியில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 14 பேர் அடங்கிய குழுவாக அந்தமானுக்கு சுற்றுலா செல்ல ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் செலுத்தினார். சுற்றுலா நிறுவனமும் 14 பேருக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து அனுப்பியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பயணம் செல்ல இயலவில்லை. இதனால் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப தர வேண்டும் என சுற்றுலா மற்றும் விமான நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து விமான நிறுவன அதிகாரிகள் டிக்கெட்டுக்கான கட்டணத்தை சுற்றுலா நிறுவனத்திடம் திருப்பி கொடுத்து விட்டதாக மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பினர். உடனடியாக மீண்டும் சுற்றுலா நிறுவனத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமானக் கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டனர். அதற்கு சுற்றுலா நிறுவனம் ஒரு காசோலையை வழங்கியது. ஆனால் அந்த காசோலை பணமில்லாமல் திரும்ப வந்தது.
ரூ.35 ஆயிரம் அபராதம்
இதனால் பாதிக்கப்பட்ட ஞானப்பிரகாசம் உள்ளிட்ட 14 பேரும் வக்கீல் மூலம் சுற்றுலா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஞானப்பிரகாசம் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்து சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டை சுட்டிக் காட்டி ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மேலும் அபராத தொகை, பயணம் செய்யாத விமானக் கட்டணமான ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் பாதிக்கபட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.