உரிமம் பெறாமல் வணிகம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்


உரிமம் பெறாமல் வணிகம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உரிமம் பெறாமல் வணிகம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நீலகிரி

கூடலூர்,

உரிமம் பெறாமல் வணிகம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

புதுப்பித்தல் முகாம்

கூடலூரில் உணவுப்பொருள் வணிகர்களுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் நேற்று நடைபெற்றது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் கலந்துகொண்டு உரிமம் பதிவு செய்வதற்கான படிவங்களை பெற்றுக்கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக ரசீது கொடுக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.30-க்கு பெறப்பட்டு, பயோ டீசலாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் மற்றும் குட்காவை வணிகர்கள் விற்பனைக்கு வைக்க வேண்டாம். சாப்பிடும் உணவு பண்டங்களின் நிறத்தை அதிகரிக்க ரசாயன பவுடரை பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக காஷ்மீர் வத்தல் பொடியை பயன்படுத்தலாம். உணவு பாதுகாப்பு துறை சார்பில், வணிகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ரூ.5 ஆயிரம் அபராதம்

ஓட்டல், பேக்கரி, மளிகை, இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவு சார்ந்த பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் வணிகம் செய்பவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்று இருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு உரிமம் பெற்று இருந்தால் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். உணவுப்பொருட்களின் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி உள்பட அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும்.

உணவுப்பொருட்கள் விற்பனை சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில், உணவக உரிமையாளர் சங்க தலைவர் முகமது சபி, நிர்வாகிகள் வேலாயுதன், மணிகண்டன் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story