விதிமுறை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
கசடு கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என இதற்கான பஞ்சாயத்து தலைவர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கசடு கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என இதற்கான பஞ்சாயத்து தலைவர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விழிப்புணர்வு கூட்டம்
தமிழக அரசு கசடு கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கும், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்ட அரங்கில் விருதுநகர் யூனியனில் உள்ள அழகாபுரி, சத்திரரெட்டியபட்டி, கடம்பங்குளம், கூரைக்குண்டு, கோட்டையூர், குந்தலப்பட்டி, மருளூத்து, மீசலூர், மெட்டுக்குண்டு, முத்தலாபுரம், நக்கலக்கோட்டை, ஓ.கோவில்பட்டி, ஒண்டிப்புலி நாயக்கனூர், மங்கலம், பெரிய பேராலி, சிவஞானபுரம், ரோசல்பட்டி, வடமலைகுறிச்சி, சென்னல்குடி, தாதம்பட்டி, வள்ளியூர் ஆகிய பஞ்சாயத்து தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடைபெற்றது.
வாகனங்களுக்கு உரிமம்
இந்த கூட்டத்தில் நகரசபை கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறியதாவது:- கசடு கழிவுகளை அதற்காக உரிமம் பெற்ற வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று நகராட்சி சுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்ற வேண்டும். இதற்காக விருதுநகர் நகராட்சி 7 வாகனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது.
இதற்கு நகராட்சிக்கு ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டிட உரிமையாளர் அல்லது குடியிருப்புபகுதியில் வசிப்போர் விதிமுறை மீறினால் ரூ. 5 ஆயிரம் அல்லது அவ்வப்போது குறிப்பிடப்படும் தொகையினை அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உரிமை உண்டு. எனவே கசடு கழிவு மேலாண்மையை அரசு அறிவித்த விதிமுறைப்படி அனைவரும் பின்பற்றி அதனை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன், என்ஜினீயர் மணி, சுகாதாரத்துறை அலுவலர்கள், பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.