வழக்கு தொடர்ந்த அறக்கட்டளை தலைவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
வழக்கு தொடர்ந்த அறக்கட்டளை தலைவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு
அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் எம்.ஜி.பாலசுப்ரமணியன்(வயது 52). இவர் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவர் நுகர்வோரின் ஏஜெண்டு என்று கூறி 5 வழக்குகள் தாக்கல் செய்தார். இந்த வழக்குகளுக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
இதில் எம்.ஜி.பாலசுப்ரமணியன் கீழப்பழுவூர் சார் பதிவாளர், அரியலூர் மாவட்ட பதிவாளர் மற்றும் திருச்சி முத்திரை கட்டண துணை ஆட்சியர் ஆகியோர் மீது சேவை குறைபாடு சம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த அமர்வு சட்டப்படி செலுத்தவேண்டிய முத்திரைக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் மீது சேவை குறைபாடு என்று வழக்கு தாக்கல் செய்தது தவறு என கூறினர்.
அபராதம் விதிப்பு
மேலும் இது மட்டும் இன்றி மேலும் தாக்கல் செய்து இருந்த 4 வழக்குகளை விசாரணை செய்து தள்ளுபடி செய்தனர். 5 வழக்குகளும் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி என்ற அடிப்படையில் நுகர்வோரின் ஏஜெண்டு எம்.ஜி.பாலசுப்ரமணியன் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளைகள் நுகர்வோருக்கு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றமும், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையமும் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் தகுதி இல்லாமல் இந்த வழக்குகளை தாக்கல் செய்ததால் தவறாக ஏஜெண்டாக செயல்பட்ட எம்.ஜி.பாலசுப்பிரமணியன் ஒவ்வொரு வழக்குக்கும் ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.