2 மாடி வணிக வளாகத்தில் பற்றி எரிந்த தீ
நாகர்கோவிலில் வணிக வளாகத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் வணிக வளாகத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வணிக வளாகம்
நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் 2 மாடி வணிக வளாகம் உள்ளது. இதன் தரை தளத்தில் சமையல் பொடி விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. 2 கடைகள் மூடப்பட்டுள்ளன. முதல் மாடியில் யாரும் இல்லை. 2-வது மாடியில் பிரிட்ஜ் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் 2-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்கள் தீயில் எரிந்து குபு...குபு...வென புகை வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
மின்சாரம் துண்டிப்பு
இதைத்தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி அதிகாரி துரை மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்தது. 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த கடையை உடனடியாக அடைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
மேலும் சாலையில் வாகனங்கள் செல்லாதபடி இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் அடைத்தனர். இதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கியாஸ் சிலிண்டர்
தீ விபத்து காரணமாக அசம்பு ரோட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், 'வணிக வளாகத்தில் பற்றி எரிந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம். தீ பற்றி எரிந்த இடத்தில் 6 கியாஸ் சிலிண்டர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் நாங்கள் ஆய்வு செய்ததில் ஒரு கியாஸ் சிலிண்டர் மட்டும் இருந்தது. அந்த கியாஸ் சிலிண்டர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டது' என்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடிக்கும் முன்பு பாதுகாப்பாக அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.