வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
குப்பை கிடங்கில் தீ
நாகர்கோவில் பீச்ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மலைபோல் குப்பைகள் குவிந்து காட்சி அளிக்கிறது.
இதில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுபோக அந்த குப்பை குவியலில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகவும் காட்சி அளிப்பதும் வழக்கமாக உள்ளது. எனவே குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. இதை கண்ட பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைக்கும் பணி தீவிரம்
உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 வண்டிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை கிளறியும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்தது.
காலை 11 மணிக்கு தீயை முழுவதுமாக தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த தீ விபத்தால் சுற்று வட்டார பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.