மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே குடோனில் தீப்பிடித்தது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள குடோனில் தீப்பிடித்தது
மதுரை மீனாட்சி அம்மன் மேற்கு கோபுரம் அருகே மேற்கு ஆவணி மூல வீதியில் மாணவர்களுக்கான பை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் அசல் சிங் (வயது 53). இவர் கடை அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தின் 2-வது மாடி குடோனில் பொருட்களை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடை மற்றும் குடோனை ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர்.
திடீரென்று இரவு 10 மணி அளவில் குடோனில் இருந்து புகை வருவதாக அசல்சிங்கிற்கு போன் வந்தது. உடனே அவர் ஊழியர்களுடன் அங்கு சென்றார். அங்கு தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திடீர்நகர் தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதில் இரவு பற்றிய தீ அதிகாலை 4 மணிக்குள் கட்டுக்குள் வந்தது. இதற்கிடையில் தகவல் அறிந்து திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி பை கடையில் பற்றிய தீயை முழுமையாக அணைத்தனர். இதில் அந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பள்ளி மாணவர்களுக்கான பைகள், விளையாட்டு பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது குறித்து கடை உரிமையாளர் அசல்சிங் கொடுத்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.