பட்டாசு கடையில் தீ விபத்து; தந்தை-மகன் உடல் கருகி சாவு


பட்டாசு கடையில் தீ விபத்து; தந்தை-மகன் உடல் கருகி சாவு
x

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தந்தை-மகன் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புத்துக்கோவில் அருகில் உள்ள ஈச்சங்கால் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் தயாமூர்த்தி (வயது 8).

நேற்று காலை குமார் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். பள்ளி விடுமுறை என்பதால் மகன் தயாமூர்த்தி கடைக்கு வந்தான். ஆம்பூர் அருகே ரங்கபுரம் பகுதியை சேர்ந்த ராமன் (35) மற்றும் அவரது மாமனார் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (57) ஆகியோர் பட்டாசுகளை வாங்க கடைக்கு வந்தனர்.

தீயில் கருகி தந்தை-மகன் பலி

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கடைக்குள் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. பட்டாசுகள் ஒரே நேரத்தில் வெடித்ததால் குமார் மற்றும் அவருடைய மகன் தயாமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். மேலும் வேலாயுதம், ராமன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாணியம்பாடி மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கடைக்குள் இருந்த பட்டாசுகள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story