சிதம்பரம் அருகே அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் கியாஸ் கசிந்து தீப்பற்றியதால் பரபரப்பு
சிதம்பரம் அருகே அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் கியாஸ் கசிந்து தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அருகே உள்ள பழையநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளியின் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்காக சமையல் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, சிலிண்டரின் டியூப் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சமையல் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இதற்கிடையே இதுபற்றி அறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியதும் பள்ளி மாணவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.