மந்தாரக்குப்பத்தில் பழக்கடை குடோனில் தீ விபத்து; ரூ.3¾ லட்சம் பொருட்கள் சேதம்
மந்தாரக்குப்பம் பழக்கடை குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.3¾ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
மந்தாரக்குப்பம்,
குடோன் தீப்பற்றி எரிந்தது
நெய்வேலி அடுத்த மந்தாரகுப்பம் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் சீனு மனைவி ஜெகதாம்பாள் (வயது 45). இவர் தனது வீட்டின் முன்பு பழக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு மந்தாரக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் பழங்கள் இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. கடந்த 6 மாதங்களாக குடோன் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை பழக்கடை குடோன் திடீரென மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி நெய்வேலி தீயணைப்பு நிலையத்துக்கும், ஜெகதாம்பாளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் (நெய்வேலி) விஜயபாஸ்கர், (குறிஞ்சிப்பாடி) சங்கர் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அனைத்தனர்.
போலீசார் விசாரணை
அதற்கு குடோனில் இருந்த மர ரேக்குகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் ஆகும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.