நகைக்கடையில் திடீர் தீ விபத்து


நகைக்கடையில் திடீர் தீ விபத்து
x

கடலூரில் நகைக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கடலூர்

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே சுரங்கப்பாதை அருகில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அந்த நகைக்கடை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. கடையில் இருந்த நகைகள் அனைத்தும், வேறு கடைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே நேற்று மதியம் பூட்டி கிடந்த கடையில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியது. அப்போது திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது கடை பூட்டி கிடந்ததால், தீயை அணைக்க முடியாமல் சிரமப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கடையின் கதவை உடைத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த பழைய பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. மேலும் கடையின் அருகில் குவிந்து கிடந்த குப்பைகளை தீ வைத்து எரித்ததில், கடைக்கும் தீ பரவி எரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story