தனியார் வங்கி ஜெனரேட்டரில் தீப்பிடித்தது


தனியார் வங்கி ஜெனரேட்டரில் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தனியார் வங்கி ஜெனரேட்டரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள ஆஸ்பத்திரியை புகை மண்டலம் சூழ்ந்தது.

திருவாரூர்


திருவாரூர் தனியார் வங்கி ஜெனரேட்டரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள ஆஸ்பத்திரியை புகை மண்டலம் சூழ்ந்தது.

தனியார் வங்கி

திருவாரூரில் ஒரு தனியார் வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கி கிளையில் உள்ள ஜெனரேட்டர், அதே கட்டிடத்தில் 3-வது மாடியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெனரேட்டர் பழுதடைந்து கடந்த சில நாட்கள் முன்பு சீரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று திருவாரூர் நகரத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் வாரியம் மூலம் மின் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மின்தடை காரணமாக ஜெனரேட்டர் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வங்கி பணிகள் வழக்கம் போல் நடைபெற்று வந்தது.

ஜெனரேட்டரில் தீப்பிடித்தது

அப்போது திடீரென்று 3-வது மாடியில் இருந்து புகை வந்துள்ளது இதனையடுத்து வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஜெனரேட்டரில் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக வங்கியில் உள்ள அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு வங்கி மூடப்பட்டது. இதுகுறித்து கிளை மேலாளர் திருவாரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆஸ்பத்திரியில் புகை சூழ்ந்தது

இந்த வங்கிக்கு அருகில் தனியார் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த தீ விபத்து காரணமாக ஆஸ்பத்திரியிலும் புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு தீ விபத்தினால் எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் தீ பரவுவது தடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதற்கிடையில் தீயணைப்பு வீரர்கள் ஜெனரேட்டரில் பிடித்த தீயை முழுமையாக அணைத்தனர். இதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த தீவிபத்து குறித்து திருவாரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story