கூரை வீட்டில் திடீர் தீ விபத்து
கூரை வீட்டில் திடீர் தீ விபத்து
விழுப்புரம்
விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, குழந்தைகளுடன் கூரை வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நேற்று அதிகாலை 3 மணியளவில் இவருடைய வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது காற்று வேகமாக வீசவே, மளமளவென பரவிய தீ, வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் தீயில் எரிந்ததில் வீட்டில் இருந்த பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுபற்றி வினோத் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.