பெருமாள் மலைப்பகுதியில் பற்றி எரிந்த தீ
கொடைக்கானல் பெருமாள் மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெப்பம், பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பெருமாள் மலையில் இருந்து அடுக்கம் செல்லும் சாலையில் உள்ள தனியார் நிலங்களில் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. வாகனங்கள் செல்ல வழியில்லாததால் வனத்துறையினருடன், தனியார் நில உரிமையாளர்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். தற்போது அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் தீயை அணைப்பதற்காக வனத்துறை சார்பில் தீ தடுப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.