சாலையோர புல்வெளியில் பற்றி எரிந்த தீ
கோத்தகிரி அருகே சாலையோர புல்வெளியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் இருந்து அந்தமொக்கை கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் மலைப்பகுதியில் வளர்ந்திருந்த காய்ந்த புல்வெளிகள் மற்றும் செடிகொடிகள் திடீரென பற்றி எரிய தொடங்கின.
இதனைக்கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில், விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பில் இருந்த புல்வெளிகள் எரிந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.