ஓடும் வேனில் பற்றிய தீ
ஓடும் வேனில் பற்றிய தீ
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 12 பேர் ஒரு வேனில் சபரிமலைக்கு புறப்பட்டனர். வேனை அதே ஊரை சேர்ந்த தண்டபாணி (வயது 40) என்பவர் ஓட்டினார். நேற்று மதுரைக்கு வந்த அய்யப்ப பக்தர்கள் அழகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கொடைரோட்டை அடுத்த பள்ளபட்டி பிரிவு பகுதியில் வந்த போது திடீரென வேனின் என்ஜின் பகுதியில் இருந்து புகையாக கிளம்பியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோரத்தில் வேனை நிறுத்தினார்.
ஆனால் அதற்குள் வேனின் முன்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைப்பார்த்த அய்யப்ப பக்தர்கள் அலறியடித்தபடி வேனை விட்டு கீழே இறங்கி உயிர் தப்பினர். இதற்கிடையே வேனில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வேனில் பற்றிய தீயை அணைத்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.