மீன்பிடி தொழிலாளியை ஆட்டோவில் கடத்தி சென்று தாக்குதல்
சின்னசேலத்தில் மீன்பிடி தொழிலாளியை ஆட்டோவில் கடத்தி சென்று தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
சின்னசேலம்
மீன்பிடி தொழிலாளர்கள்
சின்னசேலம் அருகே புக்கிரவாரி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராம்கி(வயது 26). இவரும் அதே ஊரை சேர்ந்த பொன்னுசாமி மகன் வெங்கடேசன் மற்றும் சிறுமங்கலம் கிராமம் சக்திவேல் மகன் முத்துசாமி ஆகிய 3 பேரும் மீன்பிடி தொழிலுக்காக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து கடந்த 18-ந் தேதி இரவு சொந்த ஊருக்கு வருவதற்காக மங்களூர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
தகராறு
அப்போது அங்கு சின்னசேலம் அருகே உள்ள சிறுமங்கலம் கிராமம் ஸ்ரீதர் மகன் ராஜ்பாபு, செல்வம் மகன் கருப்புமணி ஆகிய இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ராம்கி உள்ளிட்ட 3 பேரும் அவர்களை சமாதானம் செய்து விட்டு அங்கிருந்து பஸ் மூலம் சின்னசேலம் வந்த அவர்கள் பஸ்நிலையத்தில் உள்ள தனியார் பேக்கரி கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்கள் திடீரென ராம்கியை ஆட்டோவில் கடத்தி சென்று திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை?
4 பேர் கைது
இதுகுறித்து ராம்கி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு கிராமத்தை சேர்ந்த பாபு மகன் அப்பாஸ்(23) இந்திரா நகர் சங்கர் மகன் மணி(23) கள்ளக்குறிச்சி காந்தி ரோடு செல்வராஜ் மகன் அருண் (26) கள்ளக்குறிச்சி விழந்தாங்கல் ரோடு ஜீவானந்தா மகன் வினோத்குமார்(19) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து ராம்கியை கடத்தி சென்று தாக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.