தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை திருடிய மீனவர்
குளச்சலில் தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை திருடிய மீனவர் சமூக வலைத்தளத்தில் வெளியான கேமரா காட்சியால் சிக்கினார்.
குளச்சல்:
குளச்சலில் தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை திருடிய மீனவர் சமூக வலைத்தளத்தில் வெளியான கேமரா காட்சியால் சிக்கினார்.
கவரிங் நகைகள் திருட்டு
குளச்சல் ஈழக்காலனி விளையை சேர்ந்தவர் சூசை பெர்னார்டு. இவருடைய மகன் பிரிட்டோ ஆன்றனிராஜ் (வயது 36). இவர் குளச்சல் பீச் சந்திப்பில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் எழுந்த பிரிட்டோ ஆன்றனிராஜ், வீட்டு ஜன்னலோரம் கழட்டி வைத்திருந்த 3 கவரிங் வளையல், 3 கவரிங் சங்கிலி மற்றும் 2 ஸ்மார்ட் கெடிகாரம், ஒரு செல்போன் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு ேகமரா காட்சிகளை சோதனை செய்தார்.
கேமராவில் பதிவு
அப்போது நள்ளிரவில் ஒருவர் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து ஜன்னலோரம் வைத்திருந்த கவரிங் நகைகளை தங்கநகை என நினைத்து எடுத்துக்கொண்டு அருகில் இருந்த செல்ேபான், ஸ்மார்ட்கெடிகாரம் ஆகியவற்றையும் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.
மேலும், அதில் இருக்கும் நபர் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த ஆரோக்கிய பிரவீன் (36) என்பதும், கேரளா மாநிலம் கொல்லத்தில் மீன்பிடித்தொழில் செய்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்ததும் தெரிந்தது. இந்த காட்சிகளை ஆன்றனிராஜ் குடும்பத்தினர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அந்த காட்சி நேற்று வைரலானது.
சுற்றிவளைத்து பிடித்தனர்
இந்தநிலையில் நேற்று மதியம் ஆன்றனிராஜின் உறவினர்கள் சிலர் குளச்சல் அண்ணாசிலை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆன்றனிராஜின் வீட்டில் திருடியதாக வெளியான கேமரா காட்சியில் பதிவான ஆரோக்கிய பிரவீன் சாலையில் நடந்து செல்வதை கண்டனர். உடனே அவர்கள் ஆரோக்கிய பிரவீனை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும், அவர்கள் நடந்தவற்றை கூறி சமூக வலைதளத்தில் வைரலான காட்சியும் போலீசாரிடம் காட்டினர். அதைதொடர்ந்து ஆரோக்கிய பிரவீனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கவரிங் நகைகள், செல்போன் உள்ளிட்டவற்றை மீட்டனர். பின்னர், அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.