தூத்துக்குடியில் மீன் வியாபாரி அடித்துக்கொலை
தூத்துக்குடியில் மீன் வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில், நடைபாதையில் தூங்கியபோது ஏற்பட்ட தகராறில் மீன் வியாபாரியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீன் வியாபாரி
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகரை சேர்ந்தவர் அந்தோணி ராயப்பன். இவருடைய மகன் சார்லஸ் (வயது 48). மீன் வியாபாரி. இவர் குடும்ப தகராறில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
சார்லஸ் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நடைபாதையில் (பிளாட்பாரத்தில்) இரவில் படுத்து தூங்குவாராம். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவில் அங்கு படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.
அடித்துக்கொலை
நள்ளிரவில், குடிபோதையில் அங்கு 3 பேர் வந்தனர். அவர்களுக்கும், சார்லசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து சார்லசை இரும்பு கம்பியால் அடித்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த சார்லஸ் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
3 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த சின்னமுத்து (39), எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்த குருசாமி (35) மற்றும் 18 வயது வாலிபர் ஆகியோர் சேர்ந்து குடிபோதையில் சார்லசை அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.