சென்னையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பரிதாப சாவு
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்களும், தோழிகளும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் - உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது 17). பள்ளியில் படிக்கும்போதே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தார்.
மாவட்ட அளவில் ஜொலித்த பிரியாவுக்கு தேசிய அளவில் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக மின்ன வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்தார். தினமும் கால்பந்து விளையாட்டிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
மூட்டுவலியால் அவதி
இந்நிலையில் சமீபத்தில் பிரியா மூட்டு வலியால் அவதிப்பட்டார். பல சிகிச்சைகளை மேற்கொண்டபோதும், அவருக்கு கால் வலி சரியாகவில்லை. இதையடுத்து பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை உறவினர்கள் அழைத்து சென்றனர்.
அங்கு அவரது காலை பரிசோதித்த டாக்டர்கள் லேசாக ஜவ்வு கிழிந்திருக்கிறது என்றும், இதற்காக சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை
இதனையடுத்து அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின்னர் தனது கால்வலி குணமாகும். மீண்டும் கால்பந்து போட்டியில் சாதிக்கலாம் என பிரியா நினைத்தார்.
ஆனால் கால் தொடர்ந்து வீங்கி வலியும் அதிகரித்தது. வலியால் பிரியா மிகவும் அவதிப்பட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கால் அகற்றப்பட்டது
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதும், அதனால்தான் அறுவை சிகிச்சைக்கு பிறகு கால் வீங்கியதும் தெரியவந்தது. மேலும் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் அவரது காலை அகற்ற வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வேறு வழியின்றி காலை அகற்ற கண்ணீருடன் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டது. கண்முன்னே துள்ளிக்குதித்து கால்பந்து விளையாடிய தங்களது ஆசை மகள் இந்த நிலைக்கு வந்ததை கண்டு பெற்றோர், உறவினர் சொல்ல முடியாத துயரம் கொண்டனர்.
டாக்டர்களின் அலட்சியம்
பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம் என்றும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
பரிதாப சாவு
இதற்கிடையே ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரியாவுக்கு ரத்தநாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், மயக்கவியல் துறை நிபுணர், பொதுமருத்துவ சிகிச்சை நிபுணர் அடங்கிய குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் அவரது உடல்நிலை நேற்று காலை மோசம் அடைந்தது. சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் குழு கடுமையாக போராடியபோதும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.15 மணியளவில் பிரியா பரிதாபமாக இறந்தார்.
கால் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மகள் உயிர் பிழைத்து வந்தால் போதும் என்ற எண்ணத்துடன் காத்திருந்த பெற்றோருக்கு இந்த தகவல் நெஞ்சில் இடியாய் இறங்கியது. அவர்கள் கதறி அழுது துடித்தது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
போராட்டத்தால் பரபரப்பு
பிரியா உயிரிழந்த தகவல் அறிந்ததும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அவரது உறவினர்கள், கல்லூரி தோழிகள் திரண்டனர். இதற்கிடையில் பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. அப்போது பிரியாவின் தோழிகள் ஆஸ்பத்திரி வளாகத்துக்கு உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆஸ்பத்திரி டாக்டர்களும், போலீசாரும் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் பிரேதபரிசோதனை நிறைவடைந்து, பிரியாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கதறி அழுத தோழிகள்
அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரியாவின் தோழிகள் விம்மி அழுதபடியும், சிவந்த கண்களுடனும் கலங்கி போய் உட்கார்ந்திருந்தனர்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து மாணவி பிரியாவின் உடல் ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக வெளியே கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது நண்பர்கள் அனைவருமே பிரியாவின் உடலை சூழ்ந்துகொண்டு கதறி அழுதனர். 'எழுந்திருடி பிரியா...' என தோழிகள் தலையில் அடித்துக்கொண்டு அழுதது, அனைவரையும் துக்கம் கொள்ள செய்தது. பிரியாவின் உடலை பார்த்து பயிற்சியாளர் ஜோயலும் கண்ணீர் விட்டு அழுதார்.
நடனம் ஆடிய வீடியோ
மேலும் பெரியார்நகர் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வந்த பிரியா கல்லூரிக்கு வந்து நடனம் ஆடிய வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், ஏதோ தவறு நடந்திருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பிரியாவின் சிகிச்சை தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.