வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்காத அதிகாரிகள்வெள்ளம் வடிந்தும் கிராம மக்களின் இன்னல்கள் தீரவில்லை


வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்காத அதிகாரிகள்வெள்ளம் வடிந்தும் கிராம மக்களின் இன்னல்கள் தீரவில்லை
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வராமல் உள்ளனர். இதனால் கிராம மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆத்திப்பட்டு கிராமத்தில் மாதம்பட்டு- அரும்பட்டு இடையே ராகவன் வாய்க்காலை கடந்து செல்லும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இருப்பினும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர் கதையாகி இருந்து வந்தது.

இதனால் அந்தவழியாக செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் ராகவன் வாய்க்காலை கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் கட்ட முடிவு செய்தனர். பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே பொதுமக்கள் ராகவன் வாய்க்காலை கடந்து செல்ல தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

பொதுமக்கள் அவதி

ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஆனால் வெள்ளம் வடிந்து ஓடிய பின்னரும் இதுநாள் வரையும் தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் யாரும் அங்கு ஓடோடி வரவில்லை. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மாதம்பட்டு, ஆத்திப்பட்டு, அரும்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே மாவட்ட கலெக்டர் இதில் உடனே தலையிட்டு, தற்காலிகமாக தரைப்பாலத்தை தருவதுடன், நிரந்தர தீர்வாக உயர்மட்ட பாலமும் கட்டிடத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story