சிறுமலையில் பற்றி எரிந்த காட்டுத்தீ
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.
திண்டுக்கல் அருகே சிறுமலையில் பழையூர், அகஸ்தியர்புரம், தென்மலை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் விலை உயர்ந்த பல அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில், நேற்று இரவு சிறுமலையில் மலைப்பாதை வெள்ளோடு அணை ஓரத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. காற்றின் வேகமாக வீசியதால் மற்ற இடங்களுக்கும் தீ பரவியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிறுமலை வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சிறுமலை வனச்சரகர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் மரக்கிளைகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். மர்ம நபர்கள் யாரேனும் காட்டுக்கு தீ வைத்தார்களா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.