செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள் மறந்து போன பழமையான விளையாட்டுகள்-அரசு பள்ளிகள் மூலம் மீண்டும் புத்துயிர் பெறுமா?


செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பழமையான விளையாட்டுகள் மறந்து போன நிலையில், அரசு பள்ளிகள் மூலம் மீண்டும் இந்த விளையாட்டுகள் புத்துயிர் பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

சேலம்

நவீன காலத்தில் நாளுக்கு நாள் புது புது மாற்றங்கள் நிகழ்கின்றன கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளின் விளையாட்டுகளும் மாறத்தொடங்கி விட்டன. தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் குழந்தைகளின் விளையாட்டு செல்போனில் தான் அதிகம் உள்ளது,

பல்வேறு விளையாட்டுகள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர், சிறுமிகள் ஆங்காங்கே மணல் வீடு கட்டி விளையாடுதல், ஓடி பிடித்தல், விதை பந்து உருண்டை வீசுதல் விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி, அஞ்சாங்கரம், பாரிகரம் சதுரங்கம், கில்லி, தாயம், பல்லாங்குழி, ஆடுபுலியாட்டம், கோலிக்குண்டு, பம்பரம், பில்லி குச்சி, நுங்கு வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை வீட்டுக்கு வெளியே விளையாடி மகிழ்ந்தனர். அதாவது இயற்கை வளத்தை அதிகப்படுத்த, விதை பந்து விளையாட்டு முக்கியமானது. சிறுவர், சிறுமிகள் மண் மற்றும் மாட்டு சாணத்தை எடுத்து அதில் விதைகள் வைத்து உருண்டை பிடித்து ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடுவார்கள்.

இந்த விளையாட்டில் வீசப்பட்ட விதைகள் ஆங்காங்கே விழுந்து மரங்கள், செடிகள் வளர்ந்தது. கொடுக்கும் குணம் வளர பல்லாங்குழி, ஏற்றம் இறக்கம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை என்பதை உணர்த்த பரமபதம், கூட்டல், பெருக்கல், கழித்தல் என கணக்கை கற்க கில்லி, வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற தாயம், சமமாக இல்லாத போதும் சாதிக்க தூண்டும் சக்தி பெற நொண்டி, ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான பொறுமையும் தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பெருமையை பெற கண்ணாமூச்சி என பல்வேறு விளையாட்டுகள் மனித வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தது. இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்ததுடன், அவர்களது உடல் வலிமையும் பாதுகாக்கப்பட்டது.

செல்போன் பயன்பாடு

கடந்த சில ஆண்டுகளாக நவீன தொழில்நுட்பத்தால் பெரும்பாலும் குழந்தைகளின் கையில் செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் குழந்தைகளுக்கு வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வம் குறைந்து உள்ளது, மேலும் விளையாட்டு திறன் குறைந்து செல்போனில் குழந்தைகள் அதிக நேரம் இருப்பதால் மன சோர்வு, கண் பார்வை பிரச்சினை என பலவித பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தமிழர்களின் பழமையான விளையாட்டுகளை அரசு பள்ளிகளில் பயிற்சி கொடுத்து போட்டிகள் நடத்தப்பட்டு பழமையான விளையாட்டுகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

தேவூர் அருகே மோட்டூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஈஸ்வரன்:-

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் விவசாய வயல்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு போய் விடுவோம். அப்போது ஆடு மேய்க்கும் சிறுவர்கள் எல்லாரும் சேர்ந்து வயல்களில் கில்லி விளையாட்டு, கபடி, சல்லி கற்கள் அடித்தல், ஈட்டி பந்து எறிதல், உள்ளிட்ட விளையாட்டு விளையாடுவோம், இதனால் ஆரோக்கியம் மேம்பட்டது, தற்போது செல்போனில் அனைத்து விளையாட்டுகளையும் குழந்தைகள் விளையாடுவதால், வெளிப்புற பகுதிகளில் விளையாடும் பழக்கம் குறைந்து வருகிறது, பெற்றோர்கள், குழந்தைகள் செல்போனில் அதிகம் நேரம் விளையாடுவதை கட்டுப்படுத்தி வெளிப்புற பகுதிகளில் விளையாட கற்று கொடுக்க வேண்டும்.

அழியாமல் பாதுகாக்க...

சென்றாயனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல்:-

தமிழர்களின் பாரம்பரிய பழமையான விளையாட்டுகள் அழியாமல் பாதுகாக்க அரசு முதல்கட்டமாக கிராமப்புற அரசு பள்ளிகளில் விளையாட்டு நேரத்தில் விளையாட்டு ஆசிரியர்கள் மூலம் பழமையான விளையாட்டுகள் பற்றிய மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பழமையான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும், இதனால் செல்போனில் அதிக நேரம் செலவிடும் மாணவர்களின் மனநிலை மாறி, விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்படும்.

பெரமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி:-

தேவூர் சுற்றுவட்டார கிராமப்புற பள்ளிகளில் பழமையான விளையாட்டுகளை சிறுவர் சிறுமிகளுக்கு சொல்லி கொடுத்து விளையாட வைத்து பழக்க படுத்தி வருகிறார்கள், விதை பந்து உருண்டை விளையாட்டு பிரபலமான விளையாட்டு. விதைகளை மண்ணுடன் உருண்டை பிடித்து ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடுவார்கள். அதில் இருந்து கீழே விழுந்த விதைகள் காலப்போக்கில் முளைத்து செடி கொடி மரங்களாக வளர்ந்தது. இதுபோன்று பழமையான விளையாட்டில் பல்வேறு உடற்பயிற்சிகள், ஆசனங்கள் அடங்கி இருந்தது. தற்போது பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டுமே கிராமப்புறங்களில் கயிறு இழுத்தல், உரிச்சட்டி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், ஊசியில் நூல் கோர்த்தல், இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம், கோகோ, கபடி உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்படுகிறது, அனைத்து விழாக்களிலும் பழமையான விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கலாம்.

வீட்டுக்குள் முடங்கி விட்டனர்

வடுகப்பட்டியை சேர்ந்த சுரேஷ்:-

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்ணை கூட்டி வைத்து அதில் சிறிய குச்சிகளை சொருகியவாறு கிச்சை கிச்சை சாம்பலம் சொல்லியவாறு குச்சியை மண்ணில் மூடி வைத்து அதை கண்டு பிடிக்க வைத்து விளையாடுதல், கண்ணாமூச்சி, தண்ணீரில் நீந்தி தொடுதல், கபடி, நொண்டி, பம்பரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தோம்.் தற்போது பழமையான விளையாட்டுகள் மறந்து போய் விட்டது, பழமையான விளையாட்டுகளை இப்போது எங்கேயும் விளையாடுவது இல்லை. வீட்டுக்கு வெளியே விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள் தற்போது செல்போனுடன் வீட்டுக்குள் முடங்கி விட்டனர். பழமையான விளையாட்டுகளை மறக்காமல் இருக்க அரசு பள்ளிகளில் மீண்டும் விளையாட வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story