கொடைக்கானல் அருகே 150 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விவசாயி பலி


கொடைக்கானல் அருகே 150 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விவசாயி பலி
x

கொடைக்கானல் அருகே 150 அடி ஆழ பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விவசாயி பலியானார். ஜீப் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே 150 அடி ஆழ பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விவசாயி பலியானார். ஜீப் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

காய்கறிகளுடன் ஜீப்பில் பயணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி அருகே உள்ள அசன்கொடை கிராமத்தை சேர்ந்தவர் குப்புச்சாமி. அவருடைய மகன் அபிராமன் (வயது 28). விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் அவாகோடா, பேசன் புரூட், வாழை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்திருந்தார்.

இங்கு விளையும் பழங்கள், காய்கறிகளை விற்பனைக்காக ஜீப்பில் ஏற்றி, தாண்டிக்குடியில் உள்ள கமிஷன் மண்டி கடைக்கு அபிராமன் கொண்டு செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று இரவு அபிராமன், தனது தோட்டத்தில் விளைந்த அவாகோடா, பேசன்புரூட், வாழைக்காய் உள்ளிட்டவற்றை ஜீப்பில் ஏற்றி தாண்டிக்குடியில் உள்ள கமிஷன் கடைக்கு கொண்டு சென்றார். ஜீப்பை அசன்கொடையை சேர்ந்த ஈஸ்வரன் (37) ஓட்டினார். மேலும் ஜீப்பில் அப்பகுதியை சேர்ந்த 7 விவசாயிகளும் உடன் சென்றனர்.

150 அடி பள்ளத்தில்...

தாண்டிக்குடிக்கு சென்றவுடன், அங்குள்ள கமிஷன் மண்டியில் அபிராமன் மற்றும் அவருடன் வந்த விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்தனர். பின்னர் அங்கிருந்து 9 பேரும் ஜீப்பில் அசன்கொடைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1 மணி அளவில் அந்த ஜீப், தாண்டிக்குடி-அசன்கொடை இடையே அழிஞ்சிஓடை பகுதியில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தறிகெட்டு ஓடியது.

ஒருகட்டத்தில் அந்த ஜீப் மலைப்பாதையில் இருந்து 150 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. பள்ளத்தில் ஜீப் உருண்டபோது, அதில் வந்தவர்கள் அபயகுரல் எழுப்பினர்.

விவசாயி பலி

இந்த விபத்தில் அபிராமன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் ஜீப் டிரைவர் ஈஸ்வரன் மற்றும் விவசாயிகள் நாகராஜன் (32), சரத்குமார் (27), பன்னீர்செல்வம் (26), செந்தில்குமார் (35), ரவிச்சந்திரன் (45), சின்னையா (36), சேகர் (35) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நள்ளிரவில் நடந்ததால் யாரும் அதை கவனிக்கவில்லை.

இதற்கிடையே காயமடைந்த ரவிச்சந்திரன் தாண்டிக்குடியில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், விபத்தில் பலியான அபிராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைப்பாதையில் இருந்து 150 அடி ஆழ பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story