சேலம் பெரியார் மேம்பாலத்தில் தக்காளி லோடுடன் சரக்கு வேன் கவிழ்ந்தது-நள்ளிரவில் போக்குவரத்து பாதிப்பு
சேலம் பெரியார் மேம்பாலத்தில் தக்காளி லோடுடன் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பாலத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் பெரியார் மேம்பாலத்தில் தக்காளி லோடுடன் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பாலத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சரக்கு வேன் கவிழ்ந்தது
சேலம் மாநகரில் நேற்று இரவில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் இரவில் நகரின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
இதனிடையே நள்ளிரவு 1.30 மணியளவில் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சேலம் காய்கறி மார்க்கெட்டை நோக்கி பெரியார் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனிடையே அந்த வேனின் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர் இந்த திடீர் விபத்தால் பஸ்சை உடனடியாக பிரேக் அடித்து நிறுத்த முயன்றார்.
இதில் அந்த பஸ் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி சாலையின் குறுக்காக நின்று விட்டது. இதனால் பெரியார் மேம்பாலத்தில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேன் டிரைவர் உள்பட யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சாலையின் குறுக்கே வாகனம் நின்றதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நள்ளிரவில் பெரியார் மேம்பாலத்தில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.