மோட்டார் சைக்கிள்களை திருடிய கும்பல் சிக்கியது
கொடைக்கானல் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 6 பேர் கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ஆசிக். இவர் கடந்த 4-ந்தேதி கொடைக்கானலுக்கு, தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்தார். அப்போது ஏரிச்சாலை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஆசிக் கடைக்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஆசிக் புகார் அளித்தார். இதேபோல் தாண்டிக்குடியில் கடந்த 2-ந்தேதி முகுந்தன் என்பவரது மோட்டார் சைக்கிளும் திருடுபோனது. இதுகுறித்து அவர் தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார்.
அதன்படி, தனிப்படை போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர். கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர். மேலும் பழனி, வத்தலக்குண்டு, தாராபுரம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர்.
6 பேர் கைது
போலீஸ் விசாரணையில், திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஒன்றாக வேலை செய்யும் 6 பேர் கொண்ட கும்பல், ஆசிக் மற்றும் முகுந்தன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதுதவிர அந்த கும்பல், மதுரையில் நகை பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 6 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் மதுரை பரவையை சேர்ந்த பாரத் (வயது 22), திருப்பூர் அங்கையாபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (24), வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியை சேர்ந்த ராமர் (25), கிண்ணி என்ற அழகு கண்ணன் (25), திருப்பூரை சேர்ந்த கவியரசன் (26), மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த ஜனகராஜ் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.