சட்டவிரோதமாக மண் அள்ளிய கும்பல்
அய்யலூரில் சட்டவிரோதமாக மண் அள்ளிய கும்பலுக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
வடமதுரை அருகே அய்யலூரில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் அய்யனார் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே உள்ள மலைப்பகுதியில், சட்ட விரோதமாக சிலர் மண் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அய்யலூர் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது அங்கு 3 பொக்லைன் எந்திரங்களை கொண்டு, 6 லாரிகளில் ஒரு கும்பல் மண் அள்ளிக்கொண்டிருந்தது. இதனைக்கண்ட வருவாய்த்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு சுமார் 15 அடி ஆழத்துக்கு சட்டவிரோதமாக மண் அள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து மண்ணை கொட்டி விட்டு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அவர்களை அறிவுறுத்தினர். அதன்பேரில் மண்ணை கொட்டி விட்டு பொக்லைன் எந்திரங்கள், லாரிகளை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் எடுத்து சென்றனர். இனிவருங்காலத்தில் இதுபோன்று அளவுக்கு அதிகமான ஆழம் தோண்டி மண் அள்ளினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.