ஆத்தூர் அருகே குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய கும்பல்; விவசாயிகள் புகார்


ஆத்தூர் அருகே குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய கும்பல்; விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 27 Jun 2023 2:30 AM IST (Updated: 27 Jun 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே வக்கம்பட்டி குட்டிசேர்வைக்காரன் குளத்தில் மர்மகும்பல் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

ஆத்தூர் அருகே வக்கம்பட்டி குட்டிசேர்வைக்காரன் குளத்தில் மர்மகும்பல் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மண் அள்ளும் கும்பல்

ஆத்தூர் தாலுகா அருகே வக்கம்பட்டியில் குட்டிசேர்வைக்காரன் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு மழைக்காலங்களில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து என்.பஞ்சம்பட்டி வழியாக நீர்வரத்து ஏற்படுகிறது. இந்த குளத்தின் பாசனத்தை நம்பி வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நெல், வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியின் குடிநீர் ஆதாரமாக இந்த குளம் விளங்கி வருகிறது.

இந்தநிலையில் குட்டிசேர்வைக்காரன் குளத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் அனுமதியின்றி மண் அள்ளி வருகிறது. இதனால் மண் அள்ளும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில வாரங்களில் அந்த கும்பல் குளத்தில் சுமார் 20 அடி ஆழத்துக்கு மண் அள்ளி உள்ளது. இரவு-பகலாக 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மண் அள்ளப்பட்டு, வெளியூருக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. அத்துடன் குளத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வாகை, வேப்ப மரங்கள், சீமைக்கருவேல மரங்களை வெட்டி கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மண்வளம் பாதிப்பு

குட்டிசேர்வைக்காரன் குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதால் குளத்தின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதோடு, மண்வளம் பாழ்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மைக்கேல்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், குட்டிசேர்வைக்காரன் குளத்தில் மர்மகும்பல் இரவு-பகலாக மண் அள்ளி வருகிறது. இதனால் குளத்தின் மண்வளம் பாழ்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குளத்தை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளோம் என்றனர்.

இதுகுறித்து ஆத்தூர் தாசில்தார் வடிவேல்முருகனிடம் கேட்டபோது, வக்கம்பட்டி குட்டிசேர்வைக்காரன் குளத்தில் மண் அள்ளப்படுவது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதேபோல் அந்த குளத்தில் மண் அள்ளுவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story