சிலிண்டரில் கியாஸ் கசிந்து வீட்டில் தீ; அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார்


சிலிண்டரில் கியாஸ் கசிந்து வீட்டில் தீ; அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 27 Aug 2023 3:00 AM IST (Updated: 27 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி அருகே சிலிண்டரில் கியாஸ் கசிந்து வீட்டில் தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார்.

திண்டுக்கல்

சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 65). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலம்மாள் வீட்டில் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து, தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேலம்மாள், வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கும், சத்திரப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், வேலம்மாள் வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் வீட்டுக்குள் சென்று கியாஸ் சிலிண்டரை சாமர்த்தியமாக அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல் தீப்பற்றியவுடன் வேலம்மாள் வெளியே ஓடிவந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story