தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்தது; மலை ரெயில் ரத்து


தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்தது; மலை ரெயில் ரத்து
x

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்ததால், மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் 17 வீடுகள் சேதம் அடைந்து உள்ளது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்ததால், மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் 17 வீடுகள் சேதம் அடைந்து உள்ளது.

ராட்சத மரம் விழுந்தது

நீலகிரி மாவட்டத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. சில இடங்களில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் காய்கறி பயிர்கள் மூழ்கி உள்ளன.

இந்தநிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் 2 வீடுகள் மற்றும் ரெயில்ேவ தண்டவாளத்தின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டிற்குள் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இருப்பினும், தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் குன்னூர்-ஊட்டி மலை ரெயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

17 வீடுகள் சேதம்

மேலும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழகம்-பிங்கர்போஸ்ட் சாலையில் மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மின்சார வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 5-க்கும் மேற்பட்ட இடங்களில் 22 மரங்கள் சாலைகளில் விழுந்தன.

இதேபோல் 24 மணி நேரத்தில் மழைக்கு 17 வீடுகள் பகுதி சேதம் அடைந்து உள்ளது. 3 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்தன. இதையடுத்து அந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு வருவாய் துறையினர் தலா ரூ.4,500 நிவாரண தொகை வழங்கினர். ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக மின் வினியோகம் பாதிக்கப்பட்டு வருவதால், பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மழைஅளவு

கோத்தகிரி அருகே கெந்தோனி கிராமத்தில் இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தொடர் மழையால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்து உள்ளன. மேலும் சுவர்களில் ஈரப்பதம் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் வீடுகள் இடிந்து விழும் நிலை காணப்படுகிறது. தகவல் அறிந்த கோத்தகிரி வருவாய்த்துறையினர் கெந்தோனி கிராமத்திற்கு சென்று, பாதுகாப்பு கருதி பழங்குடியின மக்கள் 12 குடும்பத்தினர் ஈளாடா ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டாில்) வருமாறு:- அவலாஞ்சி-322, முக்குருத்தி அணை-220, அப்பர்பவானி-198, பந்தலூர்-137, போர்த்திமந்து-96, சேரங்கோடு-86, பார்சன்வேலி-76, எமரால்டு-57, ஊட்டி- 18.5 மழை பெய்தது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 32 செ.மீ. பதிவானது.



Next Story