பால் கேட்டு அழுத பெண் குழந்தை விஷம் கொடுத்து கொலை
திருப்பத்தூர் அருகே மனைவி பிரிந்த நிலையில் பால் கேட்டு அழுத குழந்தை சமரசம் அடையாததால் விஷம் கொடுத்ததில் அந்த குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தைக்கும் விஷத்தை கொடுத்த தந்தை அதே விஷத்தை குடித்தார்.
குடும்ப தகராறு
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த கிழக்குபதனவாடி கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் சிவகுமார் (வயது 30). டிராக்டர் ஓட்டி வந்தார். இவருக்கும் ஜல்லியூர் பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு அக்ஷரா (5), இலக்கியா (3½) மற்றும் மித்ரா என்கிற வேண்டாமணி (14 மாதம்) ஆகிய 3 பெண் குழந்தைகள். திருமணம் ஆனதில் இருந்தே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சத்யா பீடி சுற்றி தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சத்யாவுக்கும், சிவகுமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
விஷம் கொடுத்தார்
இதில் சத்யா கோபித்துக் கொண்டு முதல் மகள் அக்ஷராவுடன், ஜல்லியூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சிவகுமார் இரண்டு குழந்தைகளுடன் மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் குழந்தைகளை கவனிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 14 மாத குழந்தை மித்ரா பாலுக்காக அழுதுள்ளது. குழந்தையை சமாதானம் செய்ய சிவகுமார் அரவணைத்தார். எவ்வளவோ முயன்றும் மித்ரா அழுகையை நிறுத்தவில்லை.
மனைவி பிரிந்து விட்டாள். நாம் வாழ்ந்து இனி என்ன செய்யப்போகிறோம் என விரக்்தியின் விளிம்புக்கே சென்ற சிவகுமார் திடீரென விபரீத முடிவை எடுத்து மித்ராவுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டார்.
அதன்பின்னர் இரண்டாவது குழந்தை இலக்கியாவிற்கும் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு அவரும் விஷத்தை குடித்து விட்டார்.
தந்தை கொடுத்த உணவில் விஷம் கலந்திருந்ததை அறியாமல் அதனை சாப்பிட்ட இலக்கியாவுக்கு வாந்தி ஏற்பட்டது.
இதனை கண்டு பயந்து போன சிவகுமார் அருகில் வசிக்கும் அவரது அண்ணனுக்கு போன் செய்து குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து விட்டு, நானும் விஷத்தை குடித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
கைக்குழந்தை சாவு
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் பதறியடித்தவாறு அங்கு வந்து பார்த்து கதறினார். 108 ஆம்புலன்சை வரவழைத்த அவர் 3 பேரையும் ஏற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கு 3 பேரையும் டாக்டர்கள் பரிசோதித்த போது 14 மாத குழந்தை வேண்டாமணி இறந்து விட்டது தெரிய வந்தது. சிவகுமார் மற்றும் இரண்டாவது குழந்தை இலக்கியா ஆகியோர் மயக்கம் தெளியாத நிலையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மனைவி பிரிந்த நிலையில் பால் கேட்டு அழுத குழந்தை சமாதானம் அடையாததால் விஷத்தை கொடுத்ததில் அந்த குழந்தை இறந்ததும் மற்றொரு குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷத்தை குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.