டாக்டர் மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு
உத்தமபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த டாக்டர் மனைவியிடம் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் டாக்டர் அப்துல் ரஹீம். இவரது மனைவி மன்சூராபேகம் (வயது 70). இவர், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சலவை எந்திரம் பழுது பார்க்க வந்ததாக கூறி ஒருவர் வந்துள்ளார். அவர், மன்சூராபேகத்தின் வீட்டுக்குள் நுழைந்து சலவை எந்திரத்தை பழுது பார்ப்பது போல நோட்டமிட்டுள்ளார். அவர் திடீரென்று மன்சூராபேகம் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். உடனே மன்சூராபேகம் திருடன், திருடன் என்று அலறி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.