நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்
அய்யன்கொல்லியில் அரசு பஸ் நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
பந்தலூர்,
அய்யன்கொல்லியில் அரசு பஸ் நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
அரசு பஸ்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதி உள்ளது. இப்பகுதிக்கு கூடலூரில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு அரசு பஸ் நாடுகாணி, தேவாலா, பந்தலூர், மழவன் சேரம்பாடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பழுதடைந்து காணப்படுவதால், அடிக்கடி பழுதாகி காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடுவழியில் நின்று விடுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் பழுதடைந்த பஸ்சை மாற்றி, புதிய பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு கூடலூரில் இருந்து கொளப்பள்ளி வழியாக அய்யன்கொல்லிக்கு வந்து கொண்டிருந்தனர். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதற்கிடையே அய்யன்கொல்லி பஜாரில் திடீரென அரசு பஸ் பழுதாகி நின்றது.
பயணிகள் அவதி
நடுரோட்டில் நின்றதால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்து பயணிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதன் காரணமாக பந்தலூர், கோழிப்பாலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். மேலும் பயணிகள் வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, அரசு பஸ் அடிக்கடி பழுதடைந்து நிற்பதை தடுக்க புதிய பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதேபோல் கூடலூரில் இருந்து காலை 7.30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் இல்லை என அடிக்கடி பஸ் இயக்கப்படாமல் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, உரிய நேரத்துக்கு இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.