தனியார் நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி 161 பேரிடம் அரசு பஸ் கண்டக்டர் ரூ.7 கோடி மோசடி


தனியார் நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி 161 பேரிடம் அரசு பஸ் கண்டக்டர் ரூ.7 கோடி மோசடி
x

தனியார் நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி 161 பேரிடம் அரசு பஸ் கண்டக்டரும், அவரது மனைவியும் ரூ.7 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், சிறுவாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாயிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மரக்காணம் வேப்பேரியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர், அவரது மனைவி ஆகியோர், தனியார் நிதி நிறுவனம் நடத்துவதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் கட்டிய பணத்தை விட 2 மடங்கு பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பிய நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அவர்களிடம் முதலீடு செய்தோம். நாங்கள் பணம் செலுத்திய ஓரிரு மாதங்கள் மட்டுமே கட்டிய பணத்திற்கு வட்டித்தொகை தந்தனர். அதன்பிறகு வட்டித்தொகையும், முதலீடு செய்த பணத்திற்கு 2 மடங்கு தொகையும் தரவில்லை.

ரூ.7 கோடி மோசடி

இதுகுறித்து நாங்கள் பலமுறை அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று பணத்தை திருப்பித்தரும்படி வற்புறுத்தி கேட்டோம். அதற்கு அவர்கள் இருவரும் பணம் கொடுக்க மறுத்ததோடு, தொடர்ந்து இதுபோன்று வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டு தொல்லை செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இவ்வாறாக 161 பேரிடம் ரூ.7 கோடியே 18 லட்சத்தை பெற்று அந்த பணத்தை உரியவர்களுக்கு கொடுக்காமல் அவர்கள் இருவரும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுபற்றி நாங்கள், பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அதன்பேரில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்தில் வீடு, நிலம் வாங்கியுள்ளதாகவும், அதை விற்று உரியவர்களுக்கு பணத்தை ஒப்படைத்து விடுவதாகவும் கூறினர். ஆனால் அவர்கள் இருவரும், எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை ஒப்படைக்கவில்லை. அவர்கள் இருவரின் மீதும் போலீசார் கைது நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது அவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு எங்கோ தலைமறைவாகி விட்டனர். எனவே அவர்கள் இருவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினார்.


Next Story