மாணவர்களை ஏற்றாமல் செல்லும் அரசு பஸ்; உரிய நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவிப்பு
மயிலாடும்பாறையில் மாணவர்களை ஏற்றாமல் அரசு பஸ் செல்வதால் உரிய நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
கடமலைக்குண்டுவில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதேபோல் பக்கத்து கிராமமான மயிலாடும்பாறையில் ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த 2 பள்ளிகளிலும் கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, அண்ணாநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மயிலாடும்பாறையில் உள்ள பள்ளி மாலை 4.15 மணிக்கு முடியும் நிலையில், 4.30 மணிக்கு பஸ் நிறுத்தத்தில் தயாராக இருக்கும் டவுன் பஸ்சில் மாணவ-மாணவிகள் பயணம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய டவுன் பஸ் 15 நிமிடம் முன்னதாக 4.15 மணிக்கே புறப்பட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி முடிந்த பிறகு பஸ் நிற்காததால் மாணவர்கள் தனியார் பஸ் மற்றும் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அரசு பஸ்சை மட்டும் நம்பி வரும் ஏழை மாணவர்கள், உரிய நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடிவதில்லை. அவர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மற்றொரு டவுன் பஸ்சில் ஏறி செல்கிறார்கள். சில மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் உதவி கேட்டு தங்களது ஊர்களுக்கு செல்கின்றனர்.
எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும். மேலும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள்,மயிலாடும்பாறையில் அரசு பஸ்கள் நின்று மாணவர்களை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.