வீட்டிற்குள் பாம்பு புகுந்ததாக போன் செய்த அரசு ஊழியர்
வேலூரில் வீட்டின் மொட்டைமாடி பூந்தொட்டிக்குள் இருந்த ஓணானை, பாம்பு என்று நினைத்து அரசு ஊழியர் தீயணைப்புத்துறையினருக்கு போன் செய்து வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் வீட்டின் மொட்டைமாடி பூந்தொட்டிக்குள் இருந்த ஓணானை, பாம்பு என்று நினைத்து அரசு ஊழியர் தீயணைப்புத்துறையினருக்கு போன் செய்து வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டிற்குள் பாம்பு
வேலூர் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு இன்று காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதனை தீயணைப்பு வீரர் எடுத்து பேசியபோது எதிர்முனையில் பேசியவர் வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டது.
உடனடியாக வந்து அதனை பிடிக்கும்படி பதற்றத்துடன் பேசி உள்ளார். இதையடுத்து தீயணைப்பு வீரர், அவரிடம் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெற்று கொண்டார்.
பின்னர் தீயணைப்பு வீரர் போனில் பேசிய நபரிடமும், பாம்பு வீட்டிற்குள் எந்த பகுதியில் உள்ளது என்றும், அதனை செல்போனில் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்ப முடியுமா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், வீட்டின் மொட்டைமாடியில் பாம்பு உள்ளது. நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லையா?. நான் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறேன்.
பாம்பு பிடிக்க வராவிட்டால் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பேன் என்று ஆவேசத்துடன் கூறி உள்ளார்.
செல்போனில் புகைப்படம்
அதற்கு தீயணைப்பு வீரர், சிலர் வீடுகளில் பாம்பு புகுந்து விட்டதாக போனில் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்பேரில் அங்கு சென்றால் தவறான தகவலாக காணப்படுகிறது.
எனவே பாம்பு இருப்பதை உறுதிப்படுத்தவே செல்போனில் புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கூறினேன். மற்றப்படி நீங்கள் கூறுவதை நம்பாமல் புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லவில்லை என்று கூறிவிட்டு போனை துண்டித்தார்.
அதையடுத்து சிறிதுநேரத்தில் வேலூர் தீயணைப்பு வீரர்கள் வேலூர் சத்துவாச்சாரி அன்புநகர் 5-வது தெருவில் உள்ள வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க விரைந்து சென்றனர்.
போன் செய்த நபர், வீட்டின் மொட்டைமாடியில் உள்ள பூந்தொட்டியில் பாம்பு பதுங்கி இருப்பதாக தீயணைப்பு வீரர்களிடம் கூறினார்.
பூந்தொட்டியில் இருந்த ஓணான்
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பூந்தொட்டி மறைந்து இருந்த பாம்பை இரும்பு கம்பியால் பிடிக்க முயன்றனர். ஆனால் அதன் உள்ளே இருந்து மஞ்சள், கருப்பு நிற கலரில் ஓணான் ஒன்று வெளியே வந்தது.
பூந்தொட்டி முழுவதுமாக தேடிப்பார்த்தும் பாம்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து தீயணைப்புவீரர்கள், அரசு ஊழியரிடம் கேட்டதற்கு, மொட்டை மாடியில் பாம்பின் தோல் (சட்டை) ஒன்று கிடந்தது.
அந்த நேரத்தில் பூந்தொட்டிக்குள் இருந்து ஓணான் எட்டி பார்த்தது. அது பாம்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போன் செய்தேன் என்றார்.
இதைக்கேட்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பின்னர் அங்கிருந்து ஓணானை விரட்டு விட்டனர்.
ஓணானை சரியாக பார்க்காமல் பாம்பு என்று நினைத்து போன் செய்து வரவழைத்து அலைக்கழித்து விட்டதாகவும், ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தால் இதனை தவிர்த்திருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் அங்கலாய்த்தப்படி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.