கழிப்பறை இல்லாத அரசு தொடக்கப்பள்ளி; மாணவ-மாணவிகள் அவதி
கடையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடையம்:
கடையம் யூனியன் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருத்தலிங்கபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விரிவாக்க பணிகள் காரணமாக, காம்பவுண்டு சவர் மற்றும் கழிப்பறை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் மாற்று கழிப்பறை வசதி எதுவும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இயற்கை உபாதை கழிக்க அந்த பகுதியில் உள்ள முள்வேலி பகுதிக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளியில் குடிநீர் வசதியும் சரிவர இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே அங்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு விரைந்து நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பள்ளியின் முன்பு கடையம் ஒன்றிய பா.ஜனதா சார்பில் வாயில் கருப்பு துணியை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர்.