வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு பள்ளி
வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு பள்ளியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வுசெய்தார்.
நெமிலி ஒன்றியம், கீழ்வீதி ஆதிதிராவிடர் காலனியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி கட்டிடம் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்ததால், அந்த கட்டிடம் சமீபத்தில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் இப்பள்ளியில் படிக்கும் 44 மாணவர்கள் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இதனை அறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவுறுத்தலின் பேரில், நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு நேற்று பள்ளிக்கு நேரில் சென்று, கட்டிடம் இடிக்கப்பட்ட பகுதிகளையும், மாணவர்கள் தங்கி பயின்று வரும் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சத்துணவு, கழிப்பறை போன்றவை குறித்து பள்ளி ஆசிரியரிடம் கேட்டறிந்தார். மேலும் ஆதிதிராடர் நலத்துறை மூலமாகவோ அல்லது நெமிலி ஒன்றிய பொது நிதியில் இருந்தோ ரூ.20 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடமும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே தலா ரூ.5 லட்சம் மதிப்பில் கழிப்பறைகளும் உடனடியாக கட்டி முடிக்க ஆத்திராவிடர் நல தாசில்தார் மற்றும் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.
அவர் கூறுகையில், இன்னும் சில நாட்களில் அமைச்சர், நெமிலி ஒன்றியத்திற்கு உடபட்ட பகுதிகளில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். அதற்குள் இப்பள்ளிக்கு 2 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக்கட்டிடம் மற்றும் கழிப்பறைகளை கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட, உரிய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.