அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
வத்தலக்குண்டுவில் மோட்டார் சைக்கிள், அரசு பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் கவுதமன் (வயது 25). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கவுதமன், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர், மதுரையில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று புல்லக்காப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புல்லாக்காப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வத்தலக்குண்டுவில், பெரியகுளம் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் அருகே கவுதமன் வந்தபோது, எதிரே பெரியகுளத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கவுதமன் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.