(செய்தி சிதறல்) வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை


(செய்தி சிதறல்) வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை
x

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பி.டெக் பட்டதாரி

திருச்சி சின்ன சவுக்காசியப்பராவுத்தர் ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 23). இவர் பி.டெக் கட்டிடக்கலை படித்துள்ளார். இந்த நிலையில் இவர் வேலைக்காக பல இடங்களில்முயற்சி செய்து வந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மலைக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பறித்த 2 பேர் கைது

*திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் தனபால் (26). இவர் திருச்சி சென்னை பைபாஸ் ஒய்ரோடு ஜங்ஷன் பகுதியில் நடந்து வந்தபோது, திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சித்திக், முகேஷ் ஆகியோர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,000 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திக், முகேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

பெண்ணுக்கு மிரட்டல்

*திருச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் கணேசன். இவரும் திருச்சி இ.பி.ரோடு, கல் மந்தை காலனியைச் சேர்ந்த இன்பான்ட் ஜூலி (28) என்பவரும் காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஜூலி கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். பின்னர் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கணேசன், ஜூலி வேலை பார்த்து வரும் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மோட்டார் வாகன நிறுவனத்திற்கு சென்று அவரிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜூலி கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் பக்தர் திடீர் சாவு

*நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பிள்ளைமாநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 14 பேர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது, மாதம்மாள் (55) என்ற பெண் அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்போது, திடீரென மயங்கி விழுந்தார். மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story