அத்திப்பட்டரையில் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்


அத்திப்பட்டரையில் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்
x

அத்திப்பட்டரையில் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

கே.வி.குப்பம்

அத்திப்பட்டரையில் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்வு கூட்டம்

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாசில்தார் அ.கீதா தலைமையில் நடைபெற்றது.

துணை தாசில்தார்கள் ப.சங்கர், அ.பிரகாசம், தலைமை நில அளவையர் குபேரன்ஷா, வனக்காப்பாளர் அ.சங்கர், உதவி வேளாண் அலுவலர் காயத்ரி உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் பேசியதாவது:-

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் ஏரி பாசன கால்வாய் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து வருகிறது.

இதனால் ஏறி நிரம்பி வெளியேறும் நீரால் பட்டா நிலத்தில் செய்துள்ள பயிர்கள் மூழ்கும் அவலம் ஏற்படுகிறது.

உடனடியாக கால்வாயை தூர்வாரி வெள்ளம் வெளியேற வகை செய்ய வேண்டும். இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று கூறி தினத்தந்தியில் செய்தி வந்துள்ளதை காட்டினர்.

பாதுகாப்பு இல்லை

செங்குப்பம் ஏரி வரத்துக் கால்வாய்க்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணி தடைப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏரியின் நீர் வரத்து கால்வாய்ப் பணியை நிறைவு செய்யவேண்டும். நாகல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டிப் புதைக்கின்றனர்.

இதனால், அதன் அருகில் உள்ள குடிநீர் கிணற்று தண்ணீர் மாசுப்படுகிறது. இதன் அருகில் ஓடும் மோர்தானா கால்வாயில் இந்த கழிவு கலந்து குடிநீர் சுகாதாரம் அற்றதாகிவிட்டது. ஊராட்சி குப்பைகளையும் தரம்பிரிக்காமல் இதன் அருகில் கொட்டி வருகின்றனர்.

தொண்டான்துளசி மலையில் இருந்து வரும் நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. தேவரிஷிகுப்பம் பகுதியில் மான், பன்றி, குரங்கு தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.

இதைத் தடுக்க பலமுறை கம்பி வேலி கேட்டு இதுவரை கிடைக்கவில்லை. ஒருபுறம் இரவில் சிறுத்தைகள் நடமாட்டத்தால் எங்கள் உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மறுபுறம் வனவிலங்குகளால் எங்கள் பயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதற்கான இழப்பீடும் எங்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

தானிய சேமிப்பு கிடங்கு

வனவிலங்கு பாதுகாப்பிற்குக் கவனம் செலுத்தும் அரசு அதே நேரத்தில் விவசாயிகளின் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும்.

வனத்துறை எல்லைப்பகுதியில் நீர்நிலை அமைத்து வனவிலங்குகளுக்குத் தேவையான உணவு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அத்திப்பட்டரையில் தானிய சேமிப்பு கிடங்கு, நெற்களம் ஆகியவற்றை அமைக்கவேண்டும்.

இவ்வாறு பேசினர்.

இதற்கு பதில் அளித்த தாசில்தார் உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்தால், உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story