திருவள்ளூரில் மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமை தாங்கி மாணவர்களிடையே அறிவுறைகளை வழங்கினார்.
தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாபெரும் தமிழ் கனவு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது, 'உலகின் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையானதாக விளங்கும் தமிழ் பண்பாட்டின் பெருமையையும், வளமையையும் அது எதிர்கொண்ட சவால்களையும் மாணவர்களாகிய உங்களிடம் கொண்டு செல்வதற்கு தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவர்கள் படித்து பயன்பெற வேண்டும்
நமது தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான ஒரு எதிர்கால சமுதாய கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரீகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, கல்வி புரட்சி, அரசின் திட்டங்கள், அவற்றை செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நூல்களும் தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட உள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் படித்து பயன்பெறுமாற வேண்டும்.
புத்தகக் கண்காட்சி
மேலும் உயர்கல்வி வேலை வாய்ப்பு, வங்கி கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புத்தகக் கண்காட்சி அரங்கும் உள்ளது. மாணவர்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) சுபலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.