நாகையில் மாபெரும் தூய்மை பணி
உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி நாகையில் நடந்த மாபெரும் தூய்மை பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்
உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி நாகையில் நடந்த மாபெரும் தூய்மை பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
மாபெரும் தூய்மை பணி
நாகை புதிய பஸ் நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி சார்பில் மாபெரும் தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமை தாங்கி பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து வரவேற்றார்.
தொடர்ந்து அங்கு தேங்கி கிடந்த குப்பைகளை தூய்மை பணியாளருடன் சேர்ந்து கலெக்டர் அள்ளினார். மேலும் சுற்றுச்சூழலை காப்பது மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்று கூறினார்
உறுதிமொழி
தொடர்ந்து "என் குப்பை என் பொறுப்பு'' என் நகரம் என் பெருமை என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில் நகராட்சி ஆணையர் விஜய் கார்த்திக், நகர் மன்ற துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், களப்பணி உதவியாளர், தூய்மை பணி மேற்பார்வையாளர், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள், டெங்கு களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து சுற்றுச்சூழல் தின விழாவை நடத்தியது. இதில் பொதுமக்களுக்கு சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளையும், மரக்கன்றுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
பசுமை சாம்பியன் விருது
இந்த ஆண்டு நெகிழி பயன்பாட்டை குறைத்து, மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்தமைக்கு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார். இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ்ஒளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.